திங்கள், 8 செப்டம்பர், 2008

கீதா அக்கா

இது என் முதற் பதிவு , இலக்கண பிழைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

அதிகாலை வேளையில் கதிரவன் தனது ஆட்சியை அப்போதுதான் கிளை பரப்பிக் கொண்டுஇருந்தான். ராஜபாளையத்திற்கு புதிதாக குடி பெயர்ந்த சந்துரு , டீ வாங்குவதற்காக தேநீர் கடை நோக்கி தூக்கு வாலியை எடுத்து கொண்டு ஓட தொடங்கினான்.

ஓட தொடங்கிய அவனை அந்த இருமல் சத்தம் தடுத்து நிறுத்தியது. அவன் இந்த ஊருக்கு வந்த நாள் முதல் அந்த இருமல் சத்தம் அவனை எரிச்சல் ஊட்டியது என்பதை விட பயமுரத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இரவு நேரங்களில் அம்மாவிடம் கதை கேட்கும் போது எல்லாம் அந்த சத்தம் அவனை பீதிக்கொள்ள செய்துள்ளது. மெதுவாக அந்த சத்தம் வந்த இடத்தை எட்டி பார்த்தன். அங்கு ஒரு மெல்லிய உருவம் தாங்கிய ஒரு பெண்மணி , அடிவயிறு உள்வாங்க , தன் உயிரே போவது போல் இருமிகொண்டிருந்தார். இவனுக்கு அந்த உருவம், தன் அம்மா கதைகளில் வரும் சூன்யகார கிழவிப் போலவே இருந்தது. அந்த உருவம் இவனை பார்க்கும் முன்னே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

தேநீர் வாங்கி வந்து தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு, சிறிது பயத்துடனும் அந்த சத்தத்தை பற்றி கேட்டான்.
அம்மா , "எப்ப பாத்தாலும் அந்த சந்துகுள்ளேர்ந்து இருமல் சத்தம் வந்து கிட்டே இருக்கும்மா , யாரும்மா அங்க இருக்காங்க ?
காலை உணவு சமைத்து கொண்டு இருந்த அவன் அம்மா அதில் கவனம் செலுத்தியவாறே ,
"அங்க கீதா அக்கா அம்மா இருக்காங்கடா , அவங்களக்கு காச நோய் அதான் அப்படி இருமிக்கிட்டு இருகாங்க அந்த பக்கம் எல்லாம் போகாத, உனக்கும் தொத்திக்கும்" என்று சொன்னவுடனே அவனுக்கு பயம் இரண்டு மடங்கானது.
அதிலிருந்து அவன் அந்த பக்கம் போனதே இல்லை என்பதை விட ,இருமிக்கொண்டு இருக்கும் கீதா அக்காவின் அம்மாவின் உருவம் ராட்சஷி போல கற்பனை செய்ததே அதிகம். அவர்களை மட்டும் அல்ல அவனை பொறுத்த மட்டில் மெலிந்த உருவத்துடன் , யாரெல்லாம் இருமுகிரார்களோ அவர்கள் எல்லாம் ராட்சஸ்ர்கலாகவே கற்பனை செய்து கொண்டான்.
அவனக்கு அந்த தெருவில் பிடித்த நபர் என்றால் அவர் கீதா அக்கா மட்டுமே. கீதா அக்கா, அப்போது அவர்களக்கு 12 அல்லது பதிமூன்று வயதுதான் இருக்கும். ரொம்ப அமைதியான முகம், அளவான வார்த்தைகள், கிராமத்திற்கே பொருத்தமான முக வெட்டு , ஒத்த சடையும், சிவப்பு கலரு ரிப்பனும், பூ போட்ட ஆடையும் போட்டு கொண்டு கீதா அக்கா வந்தால் சந்த்ருவுக்கு சந்தோசம் தான். அவன் அப்போது தான் புதிதாக அந்த ஊருக்கு வந்ததால் , விளையாடுவதற்கு கிடைத்த ஒரே சிநேகம் கீதா அக்கா மட்டுமே. அவர் வீடும், சந்த்ருவின் வீடும் எதிர் எதிரே இருந்ததனால், நேரம் கிடைத்த போதெல்லாம் அவர்களோடு விளையாடி கொண்டிருப்பான். எப்போதுமே புன்னகையோடு திரியும் கீதா அக்காவை பார்க்கும் போது எல்லாம், இவனும் புன்னகைப்பான்.
ஒரு அதிகாலை வேலை திடிரென்று அந்த இருமல் சத்தம் நின்று போனது . அந்த சத்தத்திற்கு பதிலாக கீதா அக்காவின் அழு குரல்தான் பெரும் சத்தமாக கேட்டது. பக்கத்து வீட்டு பாட்டி கீதா அக்காவின் தாயார் இறந்து விட்டதாக கூறியது அவன் காதில் விழந்தது .
athan piragu கீதா அக்காவை அவன் பார்த்தது இரண்டு வாரம் கழித்துதான். இவன் அவர்களை பார்த்து சிரித்த போதும், அவர்களின் முகத்தில் அந்த புன்னகை இல்லை, சமையல் செய்த களைப்புதான் தெரிந்தது. கீதா அக்கா தன்னை பார்த்து சிரிக்கதாததால் பெரும் ஏம்மாற்றமடைந்தான். அதன் பின் சந்த்ருவுக்கு நிறைய நண்பர்கள், அதனால் கீதா அக்காவை பற்றிய நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது. ஆனால், தன் தாய் மற்றும் பக்கத்து வீட்டு பாட்டியும் கீதா அக்காவை பற்றி பேசும் போது மட்டும், ஆர்வத்தோடு கேட்டு கொள்வான்.
எப்போதாவது கீதா அக்காவை பார்க்கும் போது, எப்படி படிக்கிறே சந்துரு என்ற கேள்விக்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்து விட்டு , சிட்டாக பறந்து விடுவான். சில நாட்களில் சந்த்ருவும் அவனின் பெற்றோரும் வேறு ஒரு புது வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டார்கள். சுமார் இரண்டு வருடங்கள் கழித்து தன் வகுப்பு தோழனை பார்க்க கீதா அக்கா வீட்டு பக்கம் போன போது அதே இருமல் சத்தம் கேட்க , தன் நண்பனிடம்
யாருடா அங்க இருக்கறது , ஒரே இருமல் சத்தமா கேக்குது ? என்று கேட்டான்
"அது இங்க கீதான்னு ஒரு அக்கா இருக்காங்கடா , அவங்களுக்கு காச நோயாம் அதான் ஒரே இருமல் சத்தம்" என்று சொன்னது மட்டும் தான் அவன் காதில் விழுந்தது , அதற்கு மேல் அவன் தோழன் கூறியது எதுவுமே அவன் காதில் விழவில்லை.

வீடு திரும்பகையில் , அந்த சந்தை எட்டி பார்த்தான், சில வருடம் முன்னர் அவன் பார்த்த உருவம் போல் , மெல்லிய தேகத்துடன், ஒட்டிய கன்னங்களுடன் கீதா அக்கா இருமி கொண்டு இருந்தார்.

இப்போது மட்டும் ஏனோ சந்த்ருவால் காச நோயால் இருமிக்கொண்டிருக்கும் கீதா அக்காவை ராட்சஷியாக கற்பனை செய்ய முடியவில்லை.